அக்யூஸ்ட்: விமர்சனம்

சின்னச்சின்ன திருட்டுகள் மூலம் வாழ்க்கையை நடத்தி வரும் உதயா, தனது காதலி ஜான்விகா கலகரி திடீரென்று தயா பன்னீர்செல்வத்துக்கு மனைவியானதை கண்டு அதிர்கிறார். இந்நிலையில், உயிருக்கு போராடும் அவர்களின் மகளை காப்பாற்ற, அரசியல்வாதி பவனை கொல்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். டான்ஸ் மாஸ்டரும், கன்னடத்தில் பல படங்களை இயக்கியவருமான பிரபு ஸ்ரீனிவாஸ், ஆக்‌ஷன் கலந்த கிரைம் சஸ்பென்ஸ் படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார். இதுவரை நடித்த படங்களில், உதயாவுக்கு இது ‘டாப்’ படம். அக்யூஸ்ட் கனகுவாகவே வாழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற துடிக்கும் போலீசாக அஜ்மல் சிறப்பாக நடித்துள்ளார்.

காதலனுக்கும், கணவனுக்கும் இடையே தவிக்கும் கேரக்டரில் ஜான்விகா கலகரி இயல்பாக நடித்துள்ளார். லாட்ஜ் உரிமையாளராக வரும் யோகி பாபு காமெடி செய்ய, நீதிபதியாக தோன்றும் இயக்குனர் பிரபு சாலமன் போலீசுக்கு செம டோஸ் விடுகிறார். மற்றும் தயா பன்னீர்செல்வம், டி.சிவா, சந்திகா, பவன், ஸ்ரீதர், சுபத்ரா, சங்கர் பாபு, தீபா பாஸ்கர், ஜெயகுமார் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். ஐ.மருதநாயகத்தின் ஒளிப்பதிவும், நரேன் பாலகுமாரின் பின்னணி இசையும் கதையுடன் சேர்ந்து பயணித்துள்ளது. பாடல்கள் கேட்கும் ரகம். சென்னை டு சேலம் செல்லும் பேருந்தில் நடக்கும் சண்டை மற்றும் பேருந்து கவிழும் காட்சி பிரமிப்பு ஏற்படுத்துகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா சிறப்பாக வடிவமைத்துள்ளார். எடிட்டர் கே.எல்.பிரவீன் பணி கச்சிதமாக இருக்கிறது. சில டெம்ப்ளேட் காட்சிகளை பிரபு ஸ்ரீனிவாஸ் தவிர்த்து இருந்தால், அக்யூஸ்ட் இன்னும் கூட பேசப்பட்டிருக்கும்.

Related Stories: