கடந்த 2000ல் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான சரித்திரக்கதை கொண்ட படம், ‘கிளாடி யேட்டர்’. தற்போது ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ‘கிளாடியேட்டர் 2’. கொமோடஸிடம் இருந்து மாக்ஸிமஸ் ரோம் நாட்டின் மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு கதை நடக்கிறது. ரோம் மீண்டும் ஒருமுறை கெட்டா, காராகெல்லா ஆகிய இரட்டை சகோதரர்களின் கொடுங்கோல் ஆட்சியில் அல்லல்பட்டு வருகிறது. போர்கள் தொடுப்பதும் மற்றும் கொலைகள் செய்வதும் மட்டுமே அவர்களுடைய நோக்கம். முதல் பாகத்தில் படைத்தலைவராக மாக்ஸிமஸ் இருந்த இடத்தில் இப்போது அகாசியஸ் இருக்கிறார். மாக்ஸிமஸ், அவரது காதலி லூசில்லாவுக்குப் பிறந்த லூசியஸ்இப்படத்தின் ஹீரோ. அரசாள்வதற்கு சட்டப்பூர்வமான வாரிசு லூசியஸ் என்பதால், அவரைக் கொல்ல பலர் முயற்சிக்கின்றனர். இதனால் அவரது தாய் லூசில்லா, அவரைத் தப்பிக்க வைக்கிறார். சிறையிலிருந்து தப்பித்த லூசியஸ், ரோமானியர்களுக்கு எதிராக, ஆப்பிரிக்கர்களுக்கு ஆதரவாக போரிடு கிறார். அதில் கைது செய்யப்பட்ட லூசியஸ், அடிமையாக விற்கப்படுகிறார்.
தனது தந்தை மாக்ஸிமஸ் போல் கிளாடியேட்டராக இருந்து மக்களின் ஆதரவைப் பெற்று, மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதே 2வது பாகத்தின் கதையாகும்.முதல் பாகத்தை விட 2வது பாகம் பிரமாண்டமாக இருக்கிறது. வியக்க வைக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி வந்து நடிக்க வைத்து, மிக வித்தியாசமான ஒரு காட்சி அனுபவத்தை இயக்குனர் ரிட்லி காஸ்ட் வழங்கியுள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. அதற்கு இணையாக ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை கைகொடுத்து இருக்கின்றன. அடிமை வர்த்தகராக வரும் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் தனித்துவம் தெரிகிறது. நம்ம ஊரு எம்.என்.நம்பியாரைப் போல், ஆட்சி அதிகாரத்தை தனது கைவசம் கொண்டு வருவதற்காக அவர் போடும் திட்டங்கள் பலே. லூசியஸ் ஆக பாஸ் மெஸ்கல் சிறப்பாக நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கு 2வது பாகம் சற்று சோர்வைக் கொடுத்தாலும், 2வது பாகத்தை புதிதாகப் பார்ப்பவர்களுக்கு வியக்க வைக்கும் பல அனுபவங்கள் கிடைக்கும்.