கே .இ .ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதாணி, யோகி பாபு, கே. எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. கோவாவில் போலீஸ் கொடுக்கும் வேலைகளை பணத்திற்காக செய்து வரும் பவுன்டி குழுவாக செயல்படுகிறார்கள் பிரான்சிஸ் & கோ ( சூர்யா உடன் யோகி பாபு, கோவை சரளா, ரவிச்சந்திரன்) . அவருக்கு தொழில்முறை போட்டியாகவும் முன்னாள் காதலியாகவும் ஏஞ்சலினா & கோ ( தீஷா பதானி & ரெடின் கிங்ஸ்லி).
இவர்களின் ஒரு பவுன்டி ப்ராஜெக்டில் வந்து சேர்கிறான் மர்மமான சிறுவன் ஒருவன். அவனது நடவடிக்கைகளும் அவன் வந்த பின் தொடர்ந்து வரும் ஆபத்துகளுமாக நகரும் கதைக்கு பின்னணியில் வருகிறது 900 வருடங்களுக்கு முன்பான கங்குவா ( சூர்யா) மற்றும் அவரது கூட்டத்தின் போராட்டங்களும் அதன் பின்னணி கதையும். முடிவு என்ன என்பது மீதிக்கதை.
சூர்யாவின் நடிப்பு குறித்து எப்போதுமே குறை சொல்லிவிட முடியாது அந்த வகையில் இந்த படத்திலும் தனது முழு அர்ப்பணிப்பை கொடுத்து பிரான்சிஸ் மற்றும் கங்குவா என்னும் இரு கதாபாத்திரங்களிலும் தனது 100 சதவீத உழைப்பை கொடுத்து மொத்த கதையையும் தனது தோளில் தாங்கி இருக்கிறார். அவருடைய உடல்வாகு, ஆக்ரோஷமான வசனம் மற்றும் குரல் என கங்குவா கேரக்டராக ஒரு பக்கம் ஸ்டைலிஷ், டிரெண்டிங் பிரான்சிஸ் கேரக்டராக இன்னொரு பக்கம் என மாஸ் காட்டிருக்கிறார்.
அவருக்கு சரிசமமான வில்லனாக பாபி தியோலுக்கு தமிழில் இந்த படம் நல்வரவு. ஆனாலும் அவரது கதாபாத்திரத்தில் இன்னும் சுவாரசியங்கள் சேர்த்திருக்கலாம். தீஷா பதாணி, நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட், கே. எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, அவரவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி என்ன தேவையோ அதை தனது கதாபாத்திரத்தில் செய்து இருக்கிறார்கள். எனினும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் அவர்களது கேரக்டர் பளிச்சென தெரியவில்லை.
படத்தின் சினிமோட்டோகிராபி வெற்றி பழனிச்சாமி படத்தின் மிகப்பெரிய பலம் அவர்தான். படம் முழுக்க விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். மறைந்த எடிட்டர் நிஷத் யூசுப் எடிட்டிங்குகளும் பிளாஷ்பேக் ஆரம்பித்தது முதல் படம் எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. காஸ்ட்யூம், மேக்கப், ஆர்ட் டைரக்ஷன் என அத்தனை டெக்னிக்கல் குழுவும் தங்களது முழு சிறப்பையும் கொடுத்து கடின உழைப்பைக் கொட்டி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது பங்கிற்கு படத்தின் சண்டைக் காட்சிகள் துவங்கி பாடல்கள் என அத்தனையையும் ஜொலிக்க செய்திருக்கிறார். பின்னணியில் கொடுத்த அதீத சப்தத்தை தவிர்த்திருக்கலாம்.
இத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிற்கு இயக்குனர் சிவா இன்னும் சற்று உழைப்பை கொடுத்திருக்கலாம். கதை பார்த்து பழகிய பழைய முற்பிறவி அடிப்படையிலான கதையாகவே இருக்கிறது. திரைக்கதையும் எதனால் நிகழ்காலமும் இறந்த காலமும் இணைகிறது என்பதற்கான தெளிவான பதில் இல்லை. நிகழ் காலத்தில் இருக்கும் வில்லன் குழுவிற்கு ஏன் இவ்வளவு சக்தி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லாமல் இருப்பது மைனஸ் ஆக தெரிகிறது. மேலும் படம் முழுவதுமே அத்தனை பேரும் காரணமே இல்லாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயம் காது குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறனில் குறை உள்ளவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது.
3டி மற்றும் ஐமேக்ஸ் உள்ளிட்ட திரைகளுக்கான தொழில்நுட்ப அப்டேட்டுகளும் சுமாராகவே இருக்கின்றன. ஒரு சில காட்சி ஓட்டத்தில் கண்களில் வலி ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. 3டி தொழில்நுட்பம் என்பது காட்சியின் ஆழத்தை காட்டுவதற்கே என்னும் ட்ரெண்டுக்கு எப்போதோ உலக சினிமா மாறிவிட்டது. இப்போதும் ஏதோ ‘ மைடியர் குட்டிச்சாத்தான் ‘ படத்திற்கு அமைத்த ஜெம்ஸ் மிட்டாய் 3டி காட்சிகளை கையாண்டிருப்பது தேவையில்லாத ஆணி. மொத்தத்தில் கங்குவா பெரிய பட்ஜெட்டில் கடின உழைப்பு அத்தனையும் கொட்டி சரியான கதை இல்லாததால் பார்வையாளர்களை திருப்தி படுத்தாமல் தடுமாறி நிற்கிறது.