‘போலீஸ் கண்டுபிடிச்சா நகைகள் ரிட்டர்ன்’ எஸ்கேப் ஆனால், கொள்ளை பணத்தில் உல்லாச வாழ்க்கை

*பிரபல கொள்ளையன் ஆந்திராவில் கைது

ராமநாதபுரம் : உல்லாச வாழ்க்கைக்காக ராமநாதபுரம் உட்பட தென்மாவட்டங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் ஆந்திராவில் கைதானார்.

ராமநாதபுரம், பாரதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், மனைவி லோகம்மாள், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப். 12ம் தேதி அருகிலுள்ள தங்கை வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தே கால் பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கைரேகை பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததும், அம்மாநில போலீசாருடன் பேசி அந்த நபரை நேற்று முன்தினம் பிடித்தனர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷகீல் (38) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகைகளை மீட்டனர். மேலும் ஷகீல் மீது நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லுவோர், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, கடப்பாரை, ஸ்குரு டிரைவர் போன்றவற்றை பயன்படுத்தி கதவை உடைத்து திருடுவார்.

இதுபோன்ற வழக்கில் போலீஸ் ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்தால், கொள்ளையடித்ததை திருப்பி கொடுத்து விட்டு ஜெயிலுக்கு சென்று விடுவாராம். இல்லையென்றால் நகைகளை விற்று உல்லாசமான, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே கைதான ஷகீல், கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் கைக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ‘போலீஸ் கண்டுபிடிச்சா நகைகள் ரிட்டர்ன்’ எஸ்கேப் ஆனால், கொள்ளை பணத்தில் உல்லாச வாழ்க்கை appeared first on Dinakaran.

Related Stories: