சிறந்த சமுக சேவகர், தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ள சிறந்த சமுக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமுக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமுக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் மே 12ம் தேதி முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான www.awards.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தின் மூலம் வருகின்ற 12.06.2025-க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சிறந்த சமுக சேவகர், தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: