ஈரோடு,மே 5: ஈரோடு மாநகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், சமீபத்தில் மேற்கொண்ட சோதனையில் சுமார் 500 கிலோவுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், பொதுமக்களிடையே மாநகராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இருப்பினும், ஈரோடு மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. இதனால், நீர்நிலைகள்,கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. இவை தவிர, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தினசரி சேகரிக்கப்படும் 70 முதல் 80 டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள்,வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டுவதால், மலை போல் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில், மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் சோதனையை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
The post பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை நடத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.