காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது: உடந்தையாக இருந்த ‘இன்ஸ்டா’ நண்பரும் சிக்கினார்

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நாகனேந்தல் அருகே முஷ்டக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கடந்த 2ம் தேதி, மனிதக் கால்கள் வெளியே தெரிந்த நிலையில் சாக்கு மூட்டை கிடந்தது. ஆவியூர் போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி பார்த்தபோது, உடலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது. விசாரணையில் அவர் நாகனேந்தல் பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன் (45) என்பது தெரியவந்தது. இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கொலையான முருகனின் மகன் தவமணி (22) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தவமணி, அவரது நண்பர் அபுபக்கர் (23) ஆகியோர் சேர்ந்து முருகனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், பெண் ஒருவரை தவமணி காதலித்து வந்துள்ளார். இதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவமணி, தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் நண்பரான புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கியை சேர்ந்த அபுபக்கரை வரவழைத்து அவருடன் சேர்ந்து முருகனை வெட்டிக் கொலை செய்து சடலத்தை சாக்கு பையில் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. முருகனின் உடல் மீட்கப்பட்ட அன்று மனைவி, உறவினர்கள் கதறி அழுத போது, தவமணி மட்டும் எந்தவித சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்ேதகம் எழுந்தது. மேலும், தந்தையை கொலை செய்துவிட்டு அவர் பயன்படுத்திய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது: உடந்தையாக இருந்த ‘இன்ஸ்டா’ நண்பரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: