ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் பூக்க துவங்கியுள்ள நிலையில் அவை பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பூங்காக்களுக்கு சென்று அங்கு பூத்துக்குலுங்க கூடிய பல வண்ண மலர் செடிகளை பார்த்து மகிழ்கின்றனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் சமயத்தில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக தாவரவியல் பூங்காவில் நடக்க கூடிய நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்தாண்டு கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தயராகி வருகின்றன.
இதனிடையே கோடை விழா நிகழ்ச்சிகள் வரும் மே மாதம் 3,4 ஆகிய தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா’ துவங்குகிறது. கூடலூரில் 9,10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 127வது மலர் கண்காட்சி வரும் மே 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 23,24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடக்கிறது.
இம்முறை முதல்முறையாக குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் மே 30ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 5.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அலங்கார மாடங்களில் அலங்கரிப்பதற்காக சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது பூக்க துவங்கியுள்ள நிலையில், தற்போது பூங்கா ஊழியர்கள் உரமிட்டு பராமரித்து வருகின்றனர்.
The post கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்த மலர் செடிகள் பராமரிப்பு appeared first on Dinakaran.