கேரளாவில் உயர்ரக கஞ்சாவுடன் 2 பிரபல சினிமா இயக்குனர்கள் கைது: டைரக்டர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: மலையாள திரைஉலகம் போதைக்குள் மயங்கி கிடப்பதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழாவில் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள உயர் ரக கலப்பின கஞ்சாவுடன் கைதான தஸ்லீமா சுல்தான் என்ற இளம்பெண்ணுடன் பிரபல நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரிடமும் இன்று விசாரணை நடத்த கலால்துறையினர் தீர்மானித்து இருக்கின்றனர்.

நடிகர் ஷைன் டோம் சாக்கோ, சூத்ரவாக்கியம் என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதை பார்த்ததாகவும், தங்களிடம் அத்துமீறியதாகவும் பிரபல மலையாள நடிகைகள் வின்சி அலோஷியஸ், அபர்ணா ஜோன்ஸ் ஆகியோர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து குவியும் புகார்களைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளங்களிலும் தேவைப்பட்டால் போதைப்பொருள் சோதனை நடத்தப்படும் என்று கேரள கலால்துறை அமைச்சர் ராஜேஷ் கூறினார்.

இதனிடையே கொச்சியில் உள்ள பிரபல மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிரின் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கலால்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கலால்துறையினர் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அறையில் பிரபல மலையாள சினிமா இளம் டைரக்டர்களான காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா, அவர்களது நண்பரான சாஹித் முகம்மது ஆகியோர் இருந்தனர்.

இந்த சோதனையின்போது அவர்களிடம் இருந்து 1.6 கிராம் உயர்ரக கலப்பின கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை பயன்படுத்த முயற்சிக்கும் போது அவர்கள் 3 பேரும் பிடிபட்டனர். தொடர்ந்து 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை கலால்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். காலித் ரகுமான் அனுராக கரிக்கின் வெள்ளம், உண்ட, லவ், தல்லுமால, கடந்த வாரம் வெளியான ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் தென்னிந்தியாவில் கடந்த வருடம் சூப்பர் ஹிட்டாக ஓடிய மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படத்தில் டிரைவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஷ்ரப் ஹம்சா தமாஷா, பீமன்டெ வழி, சுலைகா மன்சில் ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து டைரக்டர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா 2 பேரையும் டைரக்டர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post கேரளாவில் உயர்ரக கஞ்சாவுடன் 2 பிரபல சினிமா இயக்குனர்கள் கைது: டைரக்டர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: