ஈரோடு, ஏப்.26: ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து மூலப்பட்டறை செல்லும் கே.என்.கே. ரோட்டில், திருநகர் காலனி போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் சாலைக்கு கீழ் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் ஏறி, இறங்கிச் செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களாலும் சாலையோரம் உள்ள கடைகளுக்குள் சேறும் சகதியுமான தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள் சில நேரங்களில் அந்த தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளாகியும் வருகின்றன.
இதனால், கடும் அவதிக்குள்ளான அப்பகுதியினர் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அந்த பள்ளத்தில் வாகனங்கள் இறங்கி விபத்துக்குள்ளாகாதவாறு தடுப்புக்கல் வைத்தும், சிவப்புக்கொடி ஒன்றை கட்டியும் எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் அப்பகுதியில் வாகனங்கள் இடையூறின்றி சென்று வரவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து ஆபத்தான குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.