கொத்துக்காரன் புதூர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு

ஈரோடு, மே 13: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொத்துக்காரன் புதூர் திட்டத்தின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி அருகே கொத்துக்காரன் புதூரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கொத்துக்காரன் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது, பவானி ரோட்டில் உள்ள பாலக்காட்டூர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொத்தக்காரன் புதூர் திட்டத்தின் குடிநீர் குழாயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது பழைய திட்டத்தின் என்பதால், உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கண்டறிவதில் சிரமம் உள்ளது. இதனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். இதனையடுத்து, கொத்துக்காரன் புதூர் பொதுமக்களின் நலன் கருதி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொத்துக்காரன் புதூர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: