கோபி, மே 4: கோபி அருகே உள்ள எரங்காட்டூர், பெருமுகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற வரும் சாலை விரிவாக்கம், உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி பெருமுகை ஊராட்சியில் எரங்காட்டூர் – தொட்டகோம்பை சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அதேபோன்று டி.என்.பாளையம், நாயகன் சாலை முதல் வாய்க்கால் ரோடு வரை 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் தலைமையிலான உள் தணிக்கை குழு ஈரோடு நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து உள் தணிக்கை குழுவினர் எரங்காட்டூரில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் தரம், கனம், அகலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதேபோன்று டி.என்.பாளையம் நாயகன் சாலையிலும் சாலையின் நீள, அகலம், தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜ், கோட்ட பொறியாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.