புதிய அடுக்குமாடி குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மனு

ஈரோடு, மே 13: ஈரோடு, பவானி ரோட்டில் உள்ள அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பானது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் குடிசை மாற்று வாரியத்தால் பொதுமக்களுக்கு கட்டி தரப்பட்டது. இந்த நிலையில், அந்த வீடுகள் பழுதடைந்ததையடுத்து, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அவற்றை இடித்துவிட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

பழைய குடியிருப்பில் 3 அடுக்கு மாடிகளுடன், 228 வீடுகள் இருந்தன. அதில் வசித்தவர்கள் இன்னும் அதே முகவரியிலேயே ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில், தற்போது 5 அடுக்குமாடிகளில் 300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே அங்கு வசித்து வந்தவர்களுக்கு முன் வசித்த அதே எண்ணுடைய வீட்டையே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த ஒதுக்கீடு போக மீதமுள்ள, வீடுகளை மட்டுமே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், குலுக்கல் மூலமாக வீடுகளை ஒதுக்கீடு செய்வதால் முன் தரைத்தளத்தில் வசித்த 60 முதல் 75 வயதான பலருக்கும் தற்போது 3 மற்றும் 4 அல்லது 5வது மாடிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அவர்கள் 4, 5வது மாடிகளுக்கு நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனவே, பழைய எண்ணுடைய வீடுகளையே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். முன்னதாக மனு அளிக்க வந்தவர்கள் பவானி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கலெக்டரிடம் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்பின்னரே, அவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்து சென்றனர்.

The post புதிய அடுக்குமாடி குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: