சத்தியமங்கலம்,மே12: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் சத்தியமங்கலம்,புஞ்சை புளியம்பட்டி,கோபிசெட்டிபாளையம் நகராட்சிகள் என 20க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மற்றும் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை காலிங்கராயன் வாய்க்கால்களில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மே 1ம் தேதி நிறுத்தப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 68.48 அடியாகவும்,நீர் இருப்பு 10.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 153 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 150 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும், என மொத்தம் 155 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
The post பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 155 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.