தூத்துக்குடி: பாளையங்கோட்டை மகராஜநகர் சிவந்திப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாரதி(40). இவர், வல்லநாடு பகுதியில் உலர் சலவையகம் அமைக்க மின் இணைப்பு பெறுவதற்காக வல்லநாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் திருப்பதியிடம் விண்ணப்பித்தார். அவர் ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக 10.5.2010ல் ரூ.10 ஆயிரத்தை சிவபாரதி கொடுத்துள்ளார். அதனை திருப்பதி வாங்கியபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரை பிடித்தனர். உடனே அவர் இருபது 500 ரூபாய் நோட்டுகளையும் சுருட்டி வாயில் போட்டு விழுங்க முயன்றார். அது தொண்டையில் சிக்கியது. போலீசார் அவரது வாயில் கையை நுழைத்து ரூபாய் நோட்டுகளை ரத்தக்கறையுடன் கைப்பற்றி, திருப்பதியை கைது செய்தனர். இந்த வழக்கை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வஷீத்குமார் விசாரித்து, திருப்பதிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.