துல்லியமான, பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கு சென்னையில் முதன்முறையாக ஓ-ஆர்ம் சாதனம் தொடக்கம்: காவேரி மருத்துவமனை தகவல்


சென்னை: அறுவை சிகிச்சை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய சென்னையில் முதன்முறையாக ஓ-ஆர்ம் சாதனம் தொடங்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்காக ஓ-ஆர்ம் (O-Arm) சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. இஸ்ரோ தலைவர் நாராயணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓ – ஆர்ம் சாதனத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகுத்தண்டிற்கான அறுவை சிகிச்சை தலைமை நிபுணரும், நரம்பு அறிவியல் துறையின் இயக்குநருமான மருத்துவர் ரங்கநாதன் ஜோதி சாதனம் பற்றி கூறியதாவது: செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் 2டி மற்றும் 3டி இமேஜிங் வழியாக இயங்கும் ஓ – ஆர்ம் சாதனம், மிக அதிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் அதிக சிக்கலான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை செயல்முறைகளை திறம்பட மேற்கொள்ள அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதில் உள்ள மிக நவீன மொபைல் இமேஜிங் செயல்தளமானது, அறுவை சிகிச்சையின்போது 360 டிகிரி சிடி போன்ற தோற்றப் படங்களை வழங்கும். மிக நுட்பமான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின்போது ஸ்குரூக்கள் மற்றும் செயற்கை இம்பிளாண்ட்கள் மிகத் துல்லியமாக பொருத்தப்படுவதை இச்சாதனம் உறுதி செய்கிறது. கையில் ஒரு 3டி படத்தை வைத்துக் கொண்டு அறுவைசிகிச்சையை செய்வது போன்றது இது. சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும்.

குறிப்பாக மூளை-நரம்பியல் அறுவை சிகிச்சையில், ஆழமான இடத்திலிருக்கிற மூளைப் புண்கள், மூளைக் காயம், மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் சிகிச்சைக்கு ஆதரவளிக்கிறது. எலும்பியல் சிகிச்சைகளில், இடுப்புக்கூடு எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சைகளிலும், சிக்கலான எலும்பு மறுக்கட்டமைப்புகளிலும், மூட்டுகளில் திருத்தங்கள் செய்வதற்கும், எலும்பு புற்றுநோய்களை துல்லியமாக அகற்றுவதற்குமான சிகிச்சைகளிலும் இது உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post துல்லியமான, பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கு சென்னையில் முதன்முறையாக ஓ-ஆர்ம் சாதனம் தொடக்கம்: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: