கோடை வெயிலில் இருந்து மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரி மூலம் தினமும் 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர்

* காலை, மாலை ஊற்றப்படுகிறது

* நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

தஞ்சாவூர் : கோடை வெயில் கொளுத்தி வருவதால் நெடுஞ்சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்க டேங்கர் லாரி மூலம் தினமும் 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் காலை, மாலை வேளைகளில் ஊற்றப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில், தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி, அகலப்படுத்தும் பணி, சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை- பட்டுக்கோடடை சாலையில் 4 வழிச்சாலை விரிவாக்கத்துக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு உட்கோட்டத்தில் மட்டும் பணிகள் மேற்கொள்வதற்காக 5 ஆண்டு திட்டத்துக்கு ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடங்களில் புதிதாக மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை, தஞ்சை- மன்னார்குடி சாலை, தஞ்சை- வல்லம் புறவழிச்சாலை, வல்லம்- ஒரத்தநாடு சாலை, தஞ்சை- பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து மேலவஸ்தாசாவடி ரவுண்டானா வரையிலான சாலை, தஞ்சையில் உள்ள பெரம்பலூர்- மானாமதுரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் அகலப்படுத்தி மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலையோரம் ஒரு மரத்தை அகற்றினால் பத்து மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற உத்தரவின்படி பல்வேறு இடங்களில் புதிதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இதன்படி தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சாலை போடப்படும் இடங்களில் ஐந்தாண்டுகளுக்கு சாலைகளை பராமரிப்பதோடு அங்கு நடப்படும் மரக்கன்றுகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமே பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இப்பகுதியில் புங்கன், வேம்பு, அத்திமரம், நாவல், புளியமரம், மாமரம், மகிழம்பூ, பூவரச மரம், ஆலமரம், அரசமரம் என பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு முள்வேலி அமைக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன. சில இடங்களில் தற்போது தான் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பட்டுப்போன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த வெயிலினால் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள், ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகள் வெயிலினால் வாடி, வதங்கி காணப்படுகின்றன.

இந்த மரக்கன்றுகள் வெயிலினால் பட்டுப்போகாமல் இருக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.18 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் தினமும் காலை, மாலை என 2 வேளைகள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகின்றன. தினம் 36 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் ஊற்ற ப்பட்டு செடிகள் பராமரி க்கப்பட்டு வருகின்றன. கோ டைகாலம் முழுவதும் இது போன்று டேங்கர் லாரிகளில் தண்ணீர் ஊற்றி பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோடை வெயிலில் இருந்து மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரி மூலம் தினமும் 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: