இதில் தமிழ்நாடு-கர்நாடகா ஆகியவற்றை இணைக்க கூடிய கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் டோல்கேட் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதே போல பெங்களூரு, ஓசூர் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், டோல்கேட்டை கடந்து கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. இந்த டோல்கேட் கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை முடிவிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
இதிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகமும், மாவட்ட எஸ்பி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகமும் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், இந்த டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பலரும் நாள்தோறும் வாகனங்களில் சென்று வருவதால், நாள் ஒன்றுக்கு பலமுறை டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பொருட்களை கிருஷ்ணகிரி சந்தைகளுக்குக் கொண்டு வர சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. கிருஷ்ணகிரி நகரின் அருகாமையில் உள்ள கிராமத்திலிருந்து கொண்டு வரப்படும் விவசாயப் பொருட்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட சுங்கச்சாலையைப் பயன்படுத்தாத நிலையில், சுங்கக் கட்டணம் கட்ட வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் அனைத்து தேவைகளுக்கும், தலைமை அலுவலகமாகச் செயல்படும் கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்துக்கும், நகரில் உள்ள பஸ் நிலையத்துக்கும் இடையே இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
எனவே, இந்த டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், தற்போது இயங்கி வரும் டோல்கேட்டை குருபரப்பள்ளியை தாண்டி, சின்னாறு அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் இந்த சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.
ஓசூர், பெங்களூரு செல்ல கூடிய பஸ்களுக்கோ, கிருஷ்ணகிரி உள்பட தமிழகததிற்கு பல்வேறு பகுதிகளுக்கு வரக்கூடிய பஸ்களுக்கு என்று தனி கவுண்டர் அமைக்காமல் அந்த வாகனங்களும் காத்து கிடக்க கூடிய நிலையே உள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் நாள்தோறும் பெங்களூர், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக வாகனங்கள் அதிக அளவில் செல்ல கூடும். எனவே, இந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post பலமுறை கட்டணம் செலுத்தும் அவலம் கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.