கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10.32 கோடியில் குந்தா – ஒசட்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மும்முரம்

மஞ்சூர்: மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் குந்தா – ஒசட்டி குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கீழ்குந்தா பேரூராட்சி பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக அம்மக்கல் ஊசிமலை, கட்லாடா, அப்புனாய் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நீர் தேக்கங்கள் தொலை தூரத்திலும் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும் பெரும்பாலான நீர் தேக்கங்களும் போதிய பராமரிப்பு இல்லாததால் நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் நீண்ட காலமாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கோடை மற்றும் வறட்சி காலங்களில் கடுமையான குடிநீர் பிரச்னை ஏற்படுவதால் குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக வேண்டி உள்ளது. இதையடுத்து குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

இதுகுறித்து கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில்குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண குந்தா ஒசட்டி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பதால் இது குறித்து நீலகிரி எம்பி ஆ.ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண குந்தா ஒசட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு எம்.பி. ஆ.ராசா பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு குந்தா-ஒசட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடி நிதியை ஒதுக்கியது.

இதன் மூலம் சமீபத்தில் குந்தா-ஒசட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் புதிய குடிநீர் செக்டேம் அமைத்தல், குந்தாபாலம், மற்றும் பாக்கொரை பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் மேலும் குடிநீர் தொட்டிகளில் இருந்து குழாய்கள் அமைத்து மின் மோட்டார்கள் மூலம் மஞ்சூர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீர் கொண்டு சென்று அதன் மூலம் மஞ்சூர் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10.32 கோடியில் குந்தா – ஒசட்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: