ஒன்றிய அரசு தடையில்லா சான்று வழங்காததால் நெல்லையில் 6 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே மேம்பால பணிகள் தாமதம்

*ராபர்ட்புரூஸ் எம்.பி குற்றச்சாட்டு

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை முடித்த போதிலும், ஒன்றிய அரசு தடையில்லா சான்று வழங்க காலதாமதம் செய்வதால் 6 மாதங்களாக பாலம் இணைப்பு பணிகள் தாமதமாகி வருவதாக நெல்லை எம்பி ராபர்ட்புரூஸ் குற்றம் சாட்டினார்.

நெல்லை மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம், ராபர்ட் புரூஸ் எம்.பி., தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், எம்பி., உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ராபர்ட்புரூஸ் எம்.பி., ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் ராபர்ட்புரூஸ் எம்பி பேசுகையில், அதிகாரிகள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, வடிகால் பணிகள் என அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். எல்லோரும் இணைந்து பணியாற்றினால் தான் மாவட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார். பின்னர் ராபர்ட்புரூஸ் எம்.பி., அளித்த பேட்டி:

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் நான்கு வழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை பணியை முடித்து 6 மாதங்களாகிறது.

ஆனால் பாலங்களை இணைப்பதற்கு ஒன்றிய அரசின் ரயில்வே துறையிடம் இருந்து தடையில்லா சான்று 6 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பாலத்தை இணைக்க முடியாத சூழல் உள்ளது.

இதே போல நெல்லை மாவட்டத்தில் கேடிசி நகர், காவல் கிணறு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடப்பதால் மேம்பாலம் அமைப்பதற்கு நிதி தயாராகி விட்டது.

ஆனால் இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து டெண்டர் விடுவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். கடந்த 2 கூட்டங்களிலும் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் பிரதிநிதியை அனுப்பியுள்ளனர்.

எனவே அடுத்த கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, யூனியன் சேர்மன்கள் மானூர் ஸ்ரீலேகா அன்பழகன், அம்பை பரணி சேகர், விகேபுரம் நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சுதர்சன், வழக்கறிஞர் ஜோசப் ஆரோக்கியராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் நன்றி கூறினார்.

The post ஒன்றிய அரசு தடையில்லா சான்று வழங்காததால் நெல்லையில் 6 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே மேம்பால பணிகள் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: