நெல்லை : நெல்லை மாநகராட்சியில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் நேற்று மாநகராட்சி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மேயர் மற்றும் துணை மேயர், அதிகாரிகள் அங்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், பள்ளிக்கூடங்களில் பணி செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் போன்ற தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் முறையாக வழங்கப்பட்டாமல் உள்ளது. தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அனைத்து தினக்கூலி தொழிலாளர்களிடமும் பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடண்ட் பண்ட் பணம் கடந்த ஒன்றரை வருடங்களாக பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளனர்.
இப்பணத்தை உடனடியாக செலுத்தக் கோரியும் நெல்லை மாநகராட்சி வளாகத்தில் நேற்று தினக்கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை மாவட்ட சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையாக மாதச்சம்பளம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மேயர் ராமகிருஷ்ணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் வரும் 25ம் தேதி மாத சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
The post மாத ஊதியம் முறையாக வழங்கக்கேட்டு நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளர்கள் திரண்டு போராட்டம் appeared first on Dinakaran.