திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இரும்பு படிக்கட்டுகள்

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் ரயில் நிலையம் தமிழகத்தில் அதிக பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமல்லாது பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பீகார், ஒடிசா, குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திருப்பூரில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் திருப்பூர் வருவதற்கும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக, திருப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பில் 22 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதி அகலப்படுத்துவது, ரயில் நிலையத்தில் கூடுதல் எஸ்கலேட்டேர் அமைப்பது, நவீன வாகன பார்க்கிங் பகுதி கட்டுமான பணி, பார்சல் புக்கிங் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூர் ரயில் நிலையம் வரும் பயணிகள் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு நடைமேடை ஒன்றில் ஒரு நுழைவு வாயில் பகுதியும், நடைமேடை இரண்டில் ஒரு நுழைவு வாயில் பகுதி மட்டுமே இருந்து வந்தது. இதனால் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் சில சமயங்களில் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்க்க ரயில்வே மேம்பாட்டு பணிகளில் ஒரு பகுதியாக நடைமேடை ஒன்றிலிருந்து வெளியேறுவதற்கு திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் அருகே கூடுதல் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், ரயில் நிலையத்தின் மையப்பகுதி அல்லாமல் முன் பகுதியில் வந்து நிற்கும் பெட்டிகளில் இருந்து இறங்கும் பயணிகள் முதன்மை நுழைவு வாயில் பகுதிக்கு செல்லாமல் ரயில்வே போலீஸ் நிலையம் அருகிலேயே ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முடியும். இரும்பு படிக்கட்டுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்த பிறகு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த இடத்தில் வெளியேறுபவர்களிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்வார்கள் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இரும்பு படிக்கட்டுகள் appeared first on Dinakaran.

Related Stories: