சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக ரூ.105ம், குறைந்தபட்சமாக ரூ.35ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ரயில்வே கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் புறநகர் ரயில் சேவையாக சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளது. சுமார் 25 லட்சம் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் புறநகர் ரயில் வழித்தடம் 1200 கிலோ மீட்டர் நீளத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்பட ஆந்திர பிரதேசம் வரை விரிவடைந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரலிருந்து மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வரையும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல போனால் சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படும் நிலையில், குளிர்சாதன ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நிலையில் நேற்று சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை குளிர்சாதன ரயில் சேவை புறநகர் ரயில் வழித்தடத்தில் தொடங்கப்பட்டது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள், மெட்ரோ ரயிலில் இருப்பது போன்று ரயில் நிலையங்களுக்கான தகவல் அமைப்பு, சிறப்பான உட்கட்டமைப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படும். 12 ஏசி பெட்டிகள் அடங்கிய மின்சார ரயிலில் 1,116 இருக்கைகள் மற்றும் 3,798 நின்று பயணிக்கும் இடம் என மொத்தம் 5,280 பயணிகள் பயணிக்க முடியும். சென்னை கடற்கரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது. மீண்டும் செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10.30க்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. தொடர்ந்து, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 3.45க்கு புறப்படும் ரயில் மாலை 5.25க்கு செங்கல்பட்டு சென்றடைகிறது.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதுபோன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் பாதையில் ஏசி மின்சார ரயில் இரவு நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.35மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30க்கு தாம்பரம் சென்றடையும். மீண்டும் தாம்பரத்திலிருந்து அடுத்த நாள், அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் 6.45 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது.
இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை கடற்கரையில் இருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆக உள்ளது.
மெட்ரோ ரயிலை விட புறநகர் ஏசி ரயில்களில் கட்டணம் அதிகமா, குறைவா?
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏசி புறநகர் மின்சார ரயில்களில் குறைந்தபட்சமாக ரூ.35ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது, சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை ஏசி ரயிலில் பயணிக்க ரூ.35 செலுத்த வேண்டும். அதே சமயம், சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை ஏசி அல்லாத சாதாரண புறநகர் ரயில்களில் முதலாம் வகுப்பில் பயணிக்க ரூ.50 இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து மாம்பலத்திற்கு ஏசி ரயிலில் பயணிக்க ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வழித்தடத்தில், ஏசி அல்லாத சாதாரண புறநகர் ரயில்களில் முதலாம் வகுப்பில் பயணிக்க ரூ.55, இரண்டாம் வகுப்பில் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து கிண்டிக்கு ஏசி ரயிலில் பயணிக்க ரூ.60 செலுத்த வேண்டும்.
அதே சமயம், கடற்கரையில் இருந்து கிண்டிக்கு ஏசி அல்லாத சாதாரண புறநகர் ரயில்களில் முதலாம் வகுப்பில் பயணிக்க ரூ.75, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு ஏசி புறநகர் ரயிலில் பயணிக்க ரூ.85 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, ஏசி அல்லாத மின்சார ரயில்களில் முதலாம் வகுப்பில் பயணிக்க ரூ.95, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.10 செலுத்த வேண்டும். கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை குளிர்சாதன புறநகர் ரயிலில் பயணிக்க ரூ.105 வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏசி அல்லாத சாதாரண புறநகர் ரயில்களில் முதலாம் வகுப்பில் பயணிக்க ரூ.100, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.15 செலவாகும். இந்நிலையில், மெட்ரோவுடன் ஒப்பிடுகையில் ஏசி புறநகர் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கருதப்படுகிறது.
அதாவது, சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை சுமார் 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை புறநகர் ஏசி மின்சார ரயிலில் சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.85 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், புறநகர் ஏசி ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிக்கெட் கட்டணத்தை சற்று குறைத்து, சேவைகளை அதிகமாக்கினால் ஏசி புறநகர் ரயிலை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.
என்னென்ன வசதிகள்?
ஏசி புறநகர் மின்சார ரயிலில் தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி திரைகள் மற்றும் பயணிகள் தகவல் அறிவிப்பு திரைகள், சிசிடிவி கேமராக்கள், பெரிய சீல் செய்யப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகள்.
கண்ணாடியில் விரிசல்
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ஏசி புறநகர் மின்சார ரயிலில் ஒரு பெட்டியில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் விரிசல் விழுந்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது. புதிதாக இயக்கப்பட்ட ரயிலில், விரிசல் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
The post தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சேவை தொடக்கம்: அதிகபட்ச கட்டணம் ரூ.105; குறைந்தபட்ச கட்டணம் 35 appeared first on Dinakaran.