மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்னணு பொருட்கள் தயாரிக்க சின்ன சின்ன பொருட்கள் தேவை. ஒன்றிய அரசும் ஒரு மின்னணு உற்பத்தி திட்டத்தை சில வாரங்களுக்கு முன் அறிவித்துள்ளது. தொழில்முனைவோர்களுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை ஒன்றிய அரசு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு, கேட்டு தெரிந்து கொண்டோம்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாடு மின்னணு உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.  ஒன்றிய அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்துக்கு இணையான, அதாவது அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை நாமும் கொடுப்போம். தமிழ்நாடு ஒரு திட்டத்தை அறிவித்து ஊக்கத்தொகை அளிக்கும் என்றால் அதை இதுவரை கொடுக்காமல் இருந்ததில்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வமாக வருகிறார்கள்.

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்து, அது வளர்ச்சி அடைந்து பலன் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ.1.25 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி நடந்தது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும்.

சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் மாநிலமாக மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 100 மில்லியன் டாலர் இலக்கை தொட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எந்த முதலீடுகளையும் திடீரென்று கொண்டு வந்து இறக்க முடியாது. முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மை உள்ள காரணத்தினால் தமிழ்நாட்டை நோக்கி அதிக முதலீடுகள் வந்துள்ளன. முதலீட்டாளர் எந்த முறையில் யோசிக்கிறார்களோ, அதே வழியில் அரசாங்கம் யோசித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு பொருளின் தரம் வேறு எங்கும் தயாரிக்க முடியது. அதற்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. போர்ட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மின் வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகமாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: