விலை ஆதரவு திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: அரசு நடவடிக்கை

சென்னை: வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, தமிழ்நாட்டில் 15.03.2025 முதல் 12.06.2025 வரை அரியலூர், ராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களிலும், 01.04.2025 முதல் 29.06.2025 வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 53 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் 44,800 மெட்ரிக்டன் உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பச்சைப்பயறு 15.03.2025 முதல் 12.06.2025 வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களிலும், 01.04.2025 முதல் 29.06.2025 வரை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 38 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் 1,440 மெட்ரிக் டன் கிலோ ஒன்றிற்கு ரூ.86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களை அணுகி சிட்டா, அடங்கல், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்திட வேண்டும். அப்போது பெறப்படும் கடவுச்சொல்லை பகிர்ந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை விற்று பயனடையலாம்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் விளைபொருட்களுக்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.

The post விலை ஆதரவு திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: