காற்று, மழையால் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை

ஈரோடு, ஏப்.26: ஈரோடு மாவட்டத்தில் காற்று-மழையால் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு தொகை வழங்க அரசுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுப்பு செய்து பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை பெற்றுத்தரப்படும் என வேளாண் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். கீழ்பவானி பாசன விவசாயிகள் பேசுகையில், ‘‘கீழ்பவானி வாய்க்காலில், 6 நனைப்புக்கு தண்ணீர் விடுவதற்கு பதில், 5 நனைப்புக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. வெயில் அதிகம் உள்ளதாலும், இன்னும் அறுவடைக்கு நாட்கள் உள்ளதால், 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க வேண்டும்’’ என்றனர்.

மேட்டூர் வலசு கரை பாசன சபை செயலர் பழனிசாமி பேசுகையில், ‘‘மேட்டூர் வலது கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதும், துார்வார வேண்டும். மண், கொடிகள் அதிகம் உள்ளதை அகற்ற வேண்டும்’’ என்றனர்.  தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி பேசுகையில், ‘‘மானாவாரி இரவை பயிருக்கு புதிய கடலை ரகங்களை வழங்க வேண்டும். கீழ்பவானியில் 5 நனைப்புக்கு வழங்கிய தண்ணீரை பயன்படுத்தாமல் வீணாக, உபரியாக காவிரியில் கலக்கிறது’’ என்றார். சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் குப்புசாமி பேசுகையில், ‘‘சக்தி சர்க்கரை ஆலை எரி சாராய கழிவை, டேங்கர்களில் கொண்டு வந்து விவசாய நிலங்கள், நீர் நிலை ஓரங்களில் ஊற்றுவதால் நிலத்தடி நீர், கிணற்று நீர், நீர் நிலைகள் பாதிக்கிறது. டேங்கரில் கொண்டு கொட்டுவதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும். பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவையும், நீர் நிலை, வயல்களிலும், பொது போக்குவரத்து பாதைகளில் கொட்டி செல்வதால், அவற்றை அகற்ற முடியாமல் சிரமமாக உள்ளது’’ என்றார்.

ஓடத்துறை பாசன உழவர் விவாதக்குழு நந்திவர்மன்: நெல் கொள்முதல் நிலையங்களில் விடுமுறையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். வரத்து அதிகம் உள்ளதால், மூட்டைகள் தேங்குகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மைக்ரோ பைனான்ஸ் போன்ற நிறுவனங்களில் விவசாய கடன் பெற்றவர்கள், சரியான தொகையை செலுத்தும் நிலையிலும், கடனை திரும்ப வசூலிப்பதற்காக வங்கி சார்பில் தனி நபர்களை நியமித்து மிரட்டுகின்றனர். தகாத வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு உரிய வரைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார். தொடர்ந்து விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். ஒவ்வொரு துறை வாரியாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு பதிலளித்து பேசினர். அப்போது, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பேசுகையில், ‘‘நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிறு மட்டும் வார விடுமுறை விடுக்கப்படுகிறது. அந்த வாரம் கொள்முதலாகும் நெல்லை, இயக்கம் செய்ய அந்த நாள் தேவைப்படுகிறது.

அன்றும், விடுமுறையாக கருதாமல், இயக்கப்பணி நடக்கும். கடந்த, 2024-25ம் ஆண்டில் 80,502 டன் நெல் கொள்முதல் நிலையம் மூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 30 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4,141 டன் நெல் கொள்முதலாகி உள்ளது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தினமும், 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது’’ என்றார். முன்னோடி வங்கி அதிகாரி பேசுகையில், ‘‘பெரும்பாலான வங்கிகள், செலுத்தப்படாத கடனை தனியார் ஏஜென்சி மூலமே வசூலிக்கின்றனர். அதற்கான விதிப்படி, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வசூலிக்க கூறுகிறோம். குறிப்பிட்ட வங்கி பெயர் கூறினால், நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார். பவானிசாகர் அணை நீர்வளத்துறை அதிகாரி, மேட்டூர் வலது கரை மற்றும் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் வடிந்ததும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் என்றார். கீழ்பவானி வாய்க்கால் செயற்பொறியாளர் பேசுகையில், ‘‘கீழ்பவானி வாய்க்காலில் 5 நனைப்புக்கு தண்ணீர் வழங்க ஏற்கனவே கடந்த காலங்களில் விவசாயிகளின் ஆலோசனை பெற்று அரசாணை பெறப்பட்டுள்ளது.

6ம் நனைப்புக்கு தண்ணீர் வழங்கினால், கூடுதல் தண்ணீர் திறப்பு நாட்கள் தேவைப்படும். இதனால், 6ம் நனைப்புக்கு தண்ணீர் திறப்பு வழங்க இயலாது’’ என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் பேசுகையில், ‘‘நந்தம் நிறுத்தம் பட்டா பிரச்னையை சரி செய்ய ஒவ்வொரு பகுதியாக, நோட்டீஸ் வழங்கி மனுவை பெற்று தீர்வு வழங்குகிறோம். கீழ்பவானி பகுதியில் மனு பெற உள்ளோம். அந்தந்த பகுதியினர் ஆர்டிஓ மற்றும் தாசில்தாரிடம் மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்’’ என்றார். வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி பேசுகையில், ‘‘விளை நிலங்களின் அளவு, பயிர் செய்யப்பட்டுள்ள விபரத்தை ‘டிஜிட்டல் சர்வே’ செய்கிறோம். இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், மகளிர் குழுவினர், வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், வேளாண் துறையினர் இப்பணி செய்கின்றனர். வயலுக்கு அவர்கள் வரும்போது ஒத்துழைப்பு வழங்குங்கள்’’ என்றார்.

வேளாண் குறைதீர் கூட்டத்தின் இறுதியில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற மே மாதம் 22ம் தொடங்க உள்ளது. நத்தம் நிறுத்தம் பற்றி பல கட்டமாக மனு பெற்றுள்ளோம். அதில் உரிய ஆவணங்கள், முழுமையாக இல்லாததால், மாற்றம் செய்ய முடியவில்லை. முழு ஆவணங்களுடன் மனு வழங்குங்கள். அம்மனுக்களுக்கு அதிகாரிகள் விரைந்து முடிக்காவிட்டால், ஜமாபந்தியில் கையெழுத்திட மாட்டேன். சமீபத்தில் காற்று, மழையால் வாழை சேதம் ஏற்பட்டதை, தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்து, இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், இழப்பீடு பெற்று தரப்படும். மாவட்ட சுற்றுச்சூழல் குழு நிதி உள்ளதால், பேபி வாய்க்கால் சீரமைக்கப்படுகிறது. மாசுபாட்டால் பாதிக்கும் வேறு நீர் நிலைகள், பிரச்னைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி சீரமைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் வேதனை:
ஈரோடு மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை அனைத்து இடத்திலும் பிரச்னையாக உள்ளது. வீட்டிலேயே, மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகளின் ஹக்கீஸ், நேப்கின் போன்றவற்றையும், குப்பையை பிரிக்காமல் தருவதால், தூய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்து, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரித்து, நீர் நிலைகளில் விடலாம். ஆனால், பாதாள சாக்கடை இணைப்புக்கு 40 சதவீதம் பேரே பெற்றுள்ளனர். பாதாள சாக்கடை இணைப்பை, படித்தவர்கள் கூட வாங்காமல் உள்ளனர்.

படித்தவர்களே இப்படி இருந்தால் என்ன செய்வது. மாசு எப்படி குறையும். இந்தியா எப்படி வளரும். மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை முறையாக மேற்கொள்ள தேவையான அறிவுரையை வழங்குகிறேன் என கலெக்டர் வேதனை தெரிவித்தார். இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகநாதன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குரு சரஸ்வதி, ஈரோடு விற்பனை குழு துணை இயக்குநர் சாவித்திரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காற்று, மழையால் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: