குடியிருப்பு பகுதியில் செயல்படும் ஸ்பின்னிங் தொழிற்சாலையால் மாசு

ஈரோடு, ஏப். 29: சென்னிமலையில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் ஸ்பின்னிங் மில்லினால் மாசுபாடு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அம்மாபாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சீனிவாசன். இவர் நேற்று அவரது மனைவி, மகன் ஆகியோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர். பின்னர், அவர்கள் கூறியதாவது: சென்னிமலை அருகே ஒட்டப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மாபாளையத்தில் வசித்து வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் நெசவாளர்கள். கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்துகிறோம். எங்கள் வீட்டை ஒட்டிய இடத்தில் தனியார் ஸ்பின்னிங் மில் கடந்த, இரண்டரை ஆண்டுக்கு முன் அமைத்தனர்.

அந்த மில்லில் முறையான பாதுகாப்பு வசதிகள், உரிமங்கள் பெறாததால், பஞ்சு தூசிகள் பறந்தபடி வந்து வீடு முழுவதும் ஒட்டி நிற்கிறது. மில்லில் இயந்திரங்கள் ஓடும் சத்தம் மிகவும் அதிகமாக உள்ளதால் வீட்டில் வசிக்க முடியவில்லை. துாங்க முடியவில்லை. எங்களுக்கு அல்சர், சுவாச பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறோம். வீட்டில் உணவு பொருட்கள், தண்ணீரில் கூட பஞ்சு தூசி படித்து சாப்பிட முடியவில்லை. இதுபற்றி கடந்த, 2 மாதத்துக்கு முன் புகார் செய்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, பஞ்சாயத்து மூலம் மில்லின் செயல்பாட்டை நிறுத்தினர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் மீண்டும் செயல்பாட்டை துவங்கி, அதே பிரச்னை நிலவுகிறது. எங்களால் வாழ முடியவில்லை. மில்லை ஆய்வு செய்து மூடுங்கள். குடியிருப்பு பகுதியில் மில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர், மனுவை பெற்ற கலெக்டா், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெருந்துறை தாசில்தார் மூலம் விசாரணைக்கு அனுப்பினார்.

The post குடியிருப்பு பகுதியில் செயல்படும் ஸ்பின்னிங் தொழிற்சாலையால் மாசு appeared first on Dinakaran.

Related Stories: