இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தனது தாயுடன் நேற்று புளியந்தோப்பு காந்திநகர் சந்திப்பில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது இவர்களுக்கு பின்புறமாக நின்றிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் இளம்பெண்ணை படம் எடுத்துள்ளார். இதை பார்த்த தாய், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து பேசின் பிரிட்ஜ் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

காவல் நிலையத்தில் அவரிடம் விசாரித்துக் ெகாண்டிருந்த போது, அவசரமாக போன் பேச வேண்டும் எனக் கூறி வெளியே வந்து அங்கிருந்து தப்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சூளை பகுதியில் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (37) என்பதும், இவர் சூளை அப்பாராவ் கார்டன் பகுதியில் தங்கி, நகை ஆச்சாரியாக வேலை செய்து வருவதும், போதையில் ஏடிஎம் வந்தபோது, அங்கிருந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: