திருப்பூர், ஏப்.10: திருப்பூர் மாநகராட்சியில் புத்துணர்ச்சி மற்றும் நகர்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் திட்டத்தின் கீழ் 636 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சர்க்கார் பெரியபாளையத்தில் 36 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 536 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்து அதன் மூலம் கழிவு நீர்களை 3 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 3 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீராக திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பெரிச்சல் அடுத்த பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சாலைக்கு அடியில் செல்லும் கழிவு நீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறியது.
இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படாமல் தடுத்திடும் வகையில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
The post பொம்மநாயக்கன்பாளையத்தில் பாதாள சாக்கடை கால்வாய் உடைப்பு; சாலையில் ஓடும் கழிவுநீர் appeared first on Dinakaran.