திருப்பதி- காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்; பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; ரூ.1,332 கோடியில் திருப்பதி – காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி பகாலா காட்பாடி ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 104 கி.மீ. தூர ரயில் பாதை பிரிவை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படும். 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களை இணைக்கும் வகையில் இரட்டை ரயில் பாதை அமையும். இந்த திட்டத்திற்கு தோராயமாக ரூ.1332 கோடி செலவாகும். ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடக்கும் என்று தெரிவித்தார். அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 19.2 கி.மீ நீளமுள்ள 6 வழி புறவழிச்சாலையை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வருடாந்திர முறையில் ரூ.1878.31 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒப்புதல்
அதேபோல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் அவசியம்.

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் பரந்தூர் விமான நிலையம் ஒரு குறிப்பிடத்தக்க படி என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டில் விமான போக்குவரத்து துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பதி- காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்; பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: