தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதை அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதை பாஜக மேலிட தலைவர் அமித்ஷா கடந்த மாதம் சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அமைவது குறித்து கட்சி நிர்வாகிகளிடமோ, அதிமுக மாவட்ட செயலாளர்களிடமோ எடப்பாடி பழனிசாமி எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்?, தேர்தல் வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான நிர்வாகிகளிடம் எழுந்துள்ள அதிருப்தியை சரிசெய்ய செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மேலும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது: பாஜக-வுடன் கூட்டணி குறித்து எடப்பாடி விளக்கமளிப்பார் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.