தமிழகத்தில் அதிகரித்துவரும் தொல்லை தெருநாய்களை கட்டுப்படுத்த அதிரடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை

சென்னை: தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தெரு நாய்களால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தெரு நாய்களுககு பயந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் உள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி அலுவலகங்களுக்கு தினசரி தொலைபேசி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தமிழக சட்டப்பேரவையிலும் இதுபற்றி பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனாலும், இதற்கு சரியான ஒரு தீர்வை இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். அண்மையில் நாடாளுமன்றத்திலும் தெருநாய்க்கடி பிரச்னை தொடர்பாக திமுக எம்பி பிரகாஷ் பேசி இருந்தார். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும், பிரதமர் மோடியை சந்தித்து தெருநாய்க்கடி பிரச்னை தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
‘‘தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்பிக்களை வலியுறுத்தியுள்ளேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்று அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தி இருந்தார்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிறுவர்கள் அச்சம் அடைகின்றனர். தெரு நாய்க்கடி பிரச்னைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசும்போது, ‘‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நல்லதொரு மாற்றத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கும், நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை அதிகளவில் மேற்கொள்ளவும், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
1. நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கிடவும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 நபர்களுக்கு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
2. தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும். 3. கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும்.
4. விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.

5. மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு/ வெறிநோய் தடுப்பூசி பணிகள் துறை மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. இந்திய விலங்குகள் நல வாரிய அறிவிக்கையின் படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்பு குழு அமைத்து சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதை கண்காணிக்க ஏதுவாக தலைமையிடம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அலுவலர்களை நியமித்து இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் உறுதி செய்ய வேண்டும். 8. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், இத்துடன் இணைந்து 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

9. அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை பணிகளை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக நாய் பிடி வாகனங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காணும் நடவடிக்கைகளுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

 

The post தமிழகத்தில் அதிகரித்துவரும் தொல்லை தெருநாய்களை கட்டுப்படுத்த அதிரடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: