கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் குறைக்கும் : பிரதமர் மோடி உரை

திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், தொழில் அதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் இந்த சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடியில் இந்த சர்வதேச துறைமுகம் அமைத்துள்ளது. சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் துறைமுகம் உள்ளது.

நவீன வசதிகள் மூலம் மாதத்திற்கு சுமார் 1 லட்சம் சரக்கு கண்டெய்னர்களை கையாள முடியும்.
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமான இங்கே, கடந்த 3 மாதங்களாக பரிசோதனை முறையில் சரக்குகள் கையாளப்பட்டதில், 272க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் வந்து சென்றன. விழிஞ்ஞம் துறைமுக தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் கடல்சார் பலம் அதிகரித்துவருவதன் அடையாளம்தான் விழிஞ்ஞம் துறைமுகம். கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் குறைக்கும். திருவனந்தபுரம் அருகே அதானி நிறுவனமும் கேரள அரசும் இணைந்து விழிஞ்ஞம் துறைமுகத்தை அமைத்துள்ளன. ரூ.8,867 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தால் மிகப்பெரிய சரக்கு கப்பலை கையாள முடியும். விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் வளர்ந்த பாரதத்திற்கான முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் குறைக்கும் : பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: