நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய கடைமடை இயக்கு அணை அமையவுள்ள இடத்தையும், விவசாயிகள் தெரிவித்த மாற்று இடங்களில் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளதா என நீர்வளத்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு நேரடியாக ஆய்வு செய்தது.
கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், பாசன உபரிநீர் மற்றும் மழை வெள்ளநீர் ஆகியவற்றை கடலில் கலக்காமல் சேமிக்கும் வகையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே புதிய கடைமடை இயக்கு அணை அமைக்க முன்னாள் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன்அன்சாரி, நாகப்பட்டினம் எம்எல்ஏ முகமது ஷாநவாஸ், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து கடந்த 2021 -2022ம் நிதியாண்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய கடைமடை இயக்கு அணை அமைக்க அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம் மூலம் தொழில் நுட்ப சாத்திய கூறுகளை ஆராய்ந்து மண் பரிசோதனை செய்யப்பட்டது.
உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய கடைமடை இயக்குஅணை அமைக்க மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. சென்னை நீர்வளத்துறை திட்ட வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்து இந்த இடத்தில் இயக்குஅணை அமைக்க சாத்தியகூறு இல்லை.
இதிலிருந்து 500 மீட்டர் மேல்பகுதியில் தளஆய்வு செய்து அந்த இடம் தகுதியான இடம் என்று தெரிவித்தார். அந்த இடத்தில் மண்பரிசோதனை செய்து அதன் அறிக்கையை ஆராய்ந்து அந்த இடத்தில் இயக்குஅணை அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்து இதற்கான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரித்து திருவாரூர் நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலகோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் சென்னை திட்ட வடிவமைப்பு கண்காணிப்புப்பொறியாளர் தெரிவித்த இடத்தில் இயக்கு அணை அமைக்க ரூ.49.50 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இந்த மதிப்பீடு திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் மற்றும் சென்னை திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் ஆகிய அலுவலகங்கள் ஆகியவற்றின் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்து 2024 -2025ம் நிதியாண்டில் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய கடைமடை இயக்குஅணை ரூ.49.50 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் மற்றும் கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி ஆகியோரால் புதிய கடைமடை இயக்கு அணை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டிய பிறகு கீழ்புறம் உள்ள விவசாயிகள் இயக்கு அணையை கீழ்புறம் தள்ளி கட்டப்பட வேண்டும். பணியை இவ்விடத்தில் மேற்கொள்ள கூடாது என கூறி பணி மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். எனவே நாகப்பட்டினம் தாசில்தார் தலைமையில் கடைமடை இயக்கு அணைக்கு கீழ்புறம் உள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் எவ்வித உடன்பாடுகளும் ஏற்படவில்லை. மேலும் கடைமடை இயக்கு அணைக்கு கீழ்புறம் உள்ள விவசாயிகளால் பணி நடைபெறும் தளத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. எனவே கடந்த 4ம்தேதி ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்திலும் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் திட்ட உருவாக்க வல்லுநர்களை அழைத்து தளத்தில் நேரடியாக ஆய்வு செய்து தொழில்நுட்ப சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அனுப்ப வலியுறுத்தினார்.
அதனடிப்படையில் தலைமைப்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், துணை தலைமைப்பொறியாளர் திட்ட உருவாக்கம், திருச்சி மண்டலம் கண்காணிப்பு பொறியாளர், கீழ் காவிரி வடிநில வட்டம் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆர்டிஓ ஆகியோர் கொண்ட குழுவினர் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் புதிய கடைமடை இயக்கு அணை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகள் தெரிவித்த மூன்று மாற்று இடங்களில் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதையும் நேரடியாக ஆய்வு செய்தனர்.
The post உத்தமசோழபுரம் வெட்டாற்று குறுக்கே ரூ.49.50 கோடியில் புதிய கடைமடை இயக்கு அணை appeared first on Dinakaran.