திருவள்ளூர்: திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்திற்கு சீல் வைக்கப்படும் என குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, குழந்தைகள் நலக்குழு கூராய்வு கூட்டம், சைல்டு லைன் கூராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது: கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தை வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகவும், போதை பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்கவும், காவல் துறை மூலம் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுத்தல், வளரிளம் பருவ சிறுமிகள் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
மேலும், இல்லங்களில் பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலருடன் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 10 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். திருமண மண்டபங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்வது உறுதி செய்யப்பட்டால் மண்டபத்தின் உரிம சான்றிதழ் ரத்து செய்து, சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் சூளைகளில் காவல் துறையினருடன் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா சுதாகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜெயகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் யுவராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிஷாந்தினி, காவல் துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், நன்னடத்தை அலுவலர், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்: பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை appeared first on Dinakaran.