சங்ககிரி : சங்ககிரி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழந்தனர். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா பெரியசோரகை தெற்கத்தியானூரை சேர்ந்தவர் நரசிம்மன் (42). இவர் பெரம்பலூரில் உள்ள கல் குவாரியில் தங்கி கம்பரஸர் வண்டி ஓட்டும் வேலை செய்து வந்தார்.
இவர் தன்னுடன் வேலை செய்து வந்த, ஓமலூர் தாலூகா துண்டம்பட்டியை சேர்ந்த மாதேஷ்(43) என்பவரை டிராக்டர் வண்டியில் ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், சேலத்தில் இருந்து கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்ககிரி அருகே கலியனுர் பிரிவில் பின்னால் தர்பூசணி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் பயணம் செய்த நரசிம்மன், மாதேஷ் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக்(23), என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் விபத்து குறித்து தகவல் அறிந்த, சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post சங்ககிரி அருகே டிராக்டர் மீது வேன் மோதியதில் 2பேர் பலி appeared first on Dinakaran.