கிலோ ₹3க்கு வாங்க கூட வியாபாரிகள் வருவதில்லையாம்… விலை குறைந்ததால் சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி பழங்கள்

*விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.3க்கு விற்பனை செய்யப்படுவதால், தக்காளி பழத்தை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், நெல், ராகி, வாழை, கரும்பு போன்ற விவசாயத்தை செய்து வருகின்றனர். குறிப்பாக பணப்பயிரான தக்காளியை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.

ராயக்கோட்டை, ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி, பர்கூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி சாகுபடியையே அதிக அளவில் நம்பி உள்ளனர். தற்போது போதிய மழை இல்லாத நிலையிலும் தக்காளி சாகுபடியை அதிக அளவில் செய்துள்ளதாலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்து உள்ளதாலும், தக்காளி விலை கடுமையாக குறைந்துள்ளது.

இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பறிக்காமலும், அவ்வாறு பறித்து விற்பனையாகாத தக்காளியை சாலையோரம் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தக்காளி விவசாயிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பணப்பயிரான தக்காளியால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்தனர். ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தால் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளியை ரூ.3க்கு கூட வாங்க வியாபாரிகள் முன்வருவதில்லை. இதனால் தக்காளி சாகுபடி செய்ய ஆகும் செலவு, பராமரிப்பு செலவு, தக்காளி பறிப்பதற்கான செலவு என பார்த்தால், ஒரு கிலோ குறைந்தது ரூ.10க்கு விற்பனை ஆனால்தான் கட்டுப்படி ஆகும். ஆனால் ரூ.3க்கு வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கால்நடைகளை தக்காளி தோட்டத்தில் விட்டு மேய்ப்பதும், அறுவடை செய்த தக்காளியை சாலையோரம் கொட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, தக்காளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட, அரசு சார்பில் ஆங்காங்கே குளிர்பதன கிடங்குகள் அமைக்கவேண்டும்’ என்றனர்.

The post கிலோ ₹3க்கு வாங்க கூட வியாபாரிகள் வருவதில்லையாம்… விலை குறைந்ததால் சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி பழங்கள் appeared first on Dinakaran.

Related Stories: