ஊட்டி அருகே பரபரப்பு வன விலங்கு தாக்கி தோடர் பழங்குடியின வாலிபர் பலி

*உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஊட்டி : ஊட்டி அருகே வனவிலங்கு தாக்கி பவுடர் பழங்குடியின வாலிபர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் வருவதால் அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது ஊட்டி அருகே வனவிலங்கு தாக்கி பவுடர் பழங்குடியின வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

ஊட்டி அருகே கல்லக்கோடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின வாலிபர் கேந்தோர் குட்டன் (38). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வளர்ப்பு எருமைகளை தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வளர்ப்பு எருமைகளை மேய்ப்பதற்காக கவர்னர் சோலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள் காட்டிற்குள் வாலிபர் உடல் காயத்துடன் கிடப்பதை பார்த்தனர்.

உடனடியாக அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது எருமை மாடுகள் மேய்க்க சென்ற வாலிபர் கேந்தோர் குட்டன் என தெரியவந்தது. அவர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடக்கிறது.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கேந்தோர் குட்டன் எருமை மேய்ப்பதற்காக சென்ற இடத்தில் விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் புலி அல்லது சிறுத்தை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடலில் இடுப்பு, கால் போன்ற பகுதிகளை தின்றுள்ளது.

அதனை பார்ப்பதற்கு அவரை தாக்கி கொன்றது புலியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து, அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் காட்டிற்குள் விறகு பொறுக்கவோ அல்லது கால்நடைகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பைக்காரா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பலியான வாலிபரின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சமாதானம் அடையவில்லை.

வன விலங்குகள் பழங்குடியின மக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை தாக்கும் வன விலங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் ஊட்டி அருகே அரக்காடு பகுதியில் வனவிலங்கு தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்னும் பொதுமக்களிடமிருந்து அகலாத நிலையில் தற்போது மேலும் ஒருவர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஊட்டி அருகே பரபரப்பு வன விலங்கு தாக்கி தோடர் பழங்குடியின வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: