* பாதுகாப்பாக அனுப்பி வைத்தவருக்கு ‘பளார்’: கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோவை: கோவை விமான நிலையம் நேற்று முன்தினம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கி வரவேற்பு வளாகத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு வாலிபர் தனது மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். திடீரென அவர்களை கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்திருந்த ஒரு இளம்பெண் சூழ்ந்துகொண்டார். மனைவியுடன் வந்த வாலிபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.
ஆனால் மனைவியுடன் வந்த வாலிபர், பதற்றத்துடன் எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு செல்வதில் குறியாக இருந்தார். அப்போது அருகில் நின்ற இன்னொரு வாலிபர் அந்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, விமானத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபரிடம் அந்த இளம்பெண் செல்லாமல் பார்த்துக்கொண்டார். இதனால் அந்த இளம்பெண் விமானத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபரை நோக்கி வசைபாட ஆரம்பித்தார்.
‘‘என்ன கல்யாணம் பண்ணிட்டு, அவ கூட ஹனிமூன் போயிட்டு வர்றியா? பொம்பள பொறுக்கி..’’ என கேட்டு வறுத்தெடுத்தார். அந்த வாலிபருடன் சென்ற பெண்ணை பார்த்து, ‘‘அவன நம்பாதே..’’ என்றும் கூறினார். பின்னர் விமானத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரை செல்லவிடாமல் கையை இறுக்கி பிடித்திருந்த வாலிபர் பார்த்துக்ெகாண்டார். அவரையும் அந்த இளம்பெண், ‘‘கைய விடு. என் கைய பிடிக்க நீ யாரு?’’ என கேட்டு திட்ட ஆரம்பித்தார்.
ஆனால் அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை விடவில்லை. இறுக்கி பிடித்துக்கொண்டார். ஆனாலும் அந்த இளம்பெண் அவரிடம் இருந்து திமிறியபடியும், ‘‘அவன பிடிங்க… அவன பிடிங்க… டேய் ஸ்டேஷனுக்கு வாடா…’’ என கூறியபடியும் விமானத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபரை நோக்கி செல்ல ஆரம்பித்தார். அதற்குள் மனைவியுடன் வந்த வாலிபர் விட்டால் போதும் என்று அங்கு நின்ற காரில் ஏறிச்சென்றுவிட்டார்.
இளம்பெண்ணை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறி சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த இளம்பெண் சமாதானம் அடையவில்லை. மாறாக அவரது ஆத்திரம் கையை இறுக்கி பிடித்திருந்த வாலிபரை நோக்கி பாய்ந்தது. அவரை நோக்கி ஓடிய அந்த இளம்பெண், அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் அறைவிட்டார். சட்டையை பிடித்து இழுத்தபடி, ‘‘அவனுக்கு சேப்டியா வந்தியா?அவன் இரு பொம்பள பொறுக்கி, நீ இரு பொம்பள பொறுக்கி என திட்ட ஆரம்பித்தார்.
அப்போது அங்கு நின்ற போலீஸ்காரர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அந்த இளம்பெண், ‘‘என்ன சேப்டியா? சேப்டியா? காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்களா?’’ என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தார். இதையடுத்து தனது கையை பிடித்திருந்த வாலிபரிடம் அந்த இளம்பெண் தகாத வார்த்தை பேசியபடி, ‘‘வயிறு எரியுதுடா? சத்தியமா சொல்றேன்’’ என்று வசை பாடினார். அவரது இந்த ரகளையை அங்கு நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அவர்களையும் இளம்பெண் சும்மா விடவில்லை. ‘‘இவ்ளோ பேர் நிக்கிறீங்க… ஒரு ஆளு அவன பிடிச்சீங்களா? எல்லாரும் வீடியோ மட்டும் எடுக்கிறீங்க. யாராவது அவன பிடிச்சீங்களா?’’ என ஆவேசமானார். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் போலீசாரிடம், விமானத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதால் நியாயம் கேட்க வந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விமான நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் கூறுகிறார். அதன்பின்னர் அந்த வாலிபர் தனக்கு தெரியாமல் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கண்ணில் படாமல் இருந்து வந்ததாகவும், தற்போது எகிப்தில் இருந்து கோவைக்கு அந்த வாலிபர் வருவதை தெரிந்துகொண்டு அவரிடம் நியாயம் கேட்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த வாலிபர் மீது புகார் அளிக்க வேண்டும் என கேட்டார். ஆனால் திருமணம், பெண் தொடர்பான புகாராக இருந்தால் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினோம். அதனால் அந்த பெண் இங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post ‘என்ன கல்யாணம் பண்ணிட்டு அவ கூட ஹனிமூனா’: விமானத்தில் மனைவியுடன் வந்திறங்கிய வாலிபரை வறுத்தெடுத்த இன்ஸ்டா காதலி appeared first on Dinakaran.