சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பனியன் மாநகரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

*3 டன் பறிமுதல்

திருப்பூர் : சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்தது. ஆனாலும் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காணப்படுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரத்திற்கு ஏற்படும் சீர்கேடுகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாங்களாகவே பெற்றுக் கொள்ளும் வகையில் தானியங்கி மஞ்சள் பை இயந்திரங்கள் வைக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பேக்கரி வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் பயன்படுத்துவதற்கு எளியது மற்றும் விலை குறைவு என்பதால் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது. சமீபகாலமாக பனியன் தொழில் நகரான திருப்பூரில் குப்பைகளில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தனியே சேகரிக்கப்பட்டு பிறகு உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டி செல்கின்றனர். அவ்வாறு கொட்டிச்செல்லும் குப்பைகளை பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகளில் அடைத்து குப்பை தொட்டிகளில் போட்டு செல்கின்றனர்.

இதனால், குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கிறது. மேலும், குப்பைத்தொட்டி இல்லாத பகுதிகளில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கூட இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பனியன் நிறுவனங்கள் மட்டுமல்லாது திருப்பூரில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளிலேயே உணவு பார்சல் செய்யப்பட்டு வருகிறது. இவை பயன்படுத்தப்பட்ட பின்பு குப்பைத்தொட்டியில் கொட்டப்படுகிறது.

குப்பை தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது மட்டுமல்லாது ஒரு சில நேரங்களில் அவை தீவைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது. இச்செயல் பசுமையக வாயுக்கள் அதிகரிக்கவும், புவி வெப்பமயமாதலுக்கு காரணமாவது மட்டுமல்லாது அப்பகுதியை சுற்றி இருப்பவர்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படுத்துகிறது.

திருப்பூர் மாநகரில் பசுமை பரப்பு குறைவு என்பதால் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு மற்றும் நாய் ஆகியவை குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை திண்பதால் அவைகளுக்கு உடல் உபாதை ஏற்படுவது மட்டுமல்லாது, மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை பருகுபவர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, குப்பைகளில் பிளாஸ்டிக் கொட்டப்படுவது ஒட்டுமொத்த சமூகப் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு சாக்கடை கால்வாயில் விழுந்து சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாகி விடுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் சுந்தர் கூறுகையில், ‘‘திருப்பூரில் பெரும்பாலான இடங்களில் குப்பை தொட்டிகளில் 70 சதவீதத்துக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளே நிரம்பி இருக்கின்றன.

வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வாங்கப்படுகிறது. பொது இடங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளிலும் மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என கொட்டுவதற்கு இருவேறு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அனைத்து குப்பைகளும் ஒருசேர கொட்டப்படுகின்றன.

இதனைப் பிரித்து எடுப்பதற்கு தூய்மை பணியாளர்களுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. குப்பை கொட்டும் போது அதனை பிரித்து கொட்ட வேண்டும் என்பதை பொதுமக்களே உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தாங்களாகவே முன்வந்து தவிர்க்க வேண்டும்.

இவை இயற்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடுகிறது. திருப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து பனியன் நிறுவனங்கள் மட்டுமல்லாது அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகளை தனியே வழங்க அறிவுறுத்த வேண்டும்’’ என்றார்.

3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

திருப்பூர் மாநகரில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தவும் முழுவதுமாக தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததாக பல்வேறு கடைகளில் இருந்து 3,142 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பனியன் மாநகரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: