திருத்தணி : ரூ.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழிச்சாலை பணிகள் முழுமை பெற்று, விரைவில் போக்குவரத்து சேவைக்கு தயார் நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. திருவள்ளூர்-அரக்கோணத்தை இணைக்கும் இச்சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், கரும்பு லாரிகள், டிராக்டர்கள், தொழிலாளர்கள் செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் பயணம் செய்கின்றன.
2 வழிச்சாலையாக உள்ள இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த விபத்துகளை தடுக்க இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, திருவாலங்காடு-திருவள்ளூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்து, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82 கோடி மதிப்பீட்டில் திருவாலங்காடு முதல் அரக்கோணம் நகராட்சி எல்லை சில்வர் பேட்டை வரை 9.2 கிமீ தூரம் 4 வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் நெடுஞ்சாலைத் துறை திருத்தணி உட்கோட்டம் கண்காணிப்பில் ஓராண்டாக பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து, சாலையை இருபுறமும் விரிவுப்படுத்தி சமன் செய்து தார் சாலை பணிகள் தற்போது முழுமை பெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் 21 இடங்களில் சிறு பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் போக்குவரத்து வசதி மேம்படுத்தவும், தொழில், வர்த்தகம் அதிகரித்து கிராமமக்கள் வாழ்வாதாரம் மேம்பட்டு பயன் பெற ஏதுவாகவும் அமைக்கப்பட்டு வரும் இந்த 4 வழிச்சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் அரக்கோணம், திருவள்ளூர், சென்னை பகுதிகளுக்கு எளிதில் பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன் தெரிவித்தார்.
இருபுறமும் 1,500 மரக்கன்று
The post ரூ.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டதிருவாலங்காடு-அரக்கோணம் 4 வழிச்சாலை பணிகள் நிறைவு appeared first on Dinakaran.