ஊட்டியில் ரூ.146.23 கோடியில் கட்டிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6-ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

*சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

ஊட்டி : ஊட்டியில் புதிதாக ரூ.146.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 6ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். மலை மாவட்டமான நீலகிரி மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூர், கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உயர்தர மருத்துவ சிசிச்சை பெறும் வகையில் ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நீலகிரியில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்காக ஊட்டி எச்பிஎப் அருகே கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர் சாலைக்கும் இடையில் தமிழக அரசு வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டது. ஊட்டியில் புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் 700 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த மருத்துவமனை கட்டுமான பணி தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று நீலகிரி அரசு மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஊட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழங்குடியினருக்கான பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். பின்னர் பழங்குடியின மக்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
அப்போது தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு மருத்துவமனையில் ரூ.16.44 கோடி செலவில் கட்டப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு, குன்னூர் அரசு மருத்துவமனையில் ரூ.2.66 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர், வலி மற்றும் பராமரிப்பு மையமும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.30 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டபெட்டு, மசினகுடி, அம்பலமூலா, கிண்ணக்கொரை, கூக்கல், தும்மனட்டி ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் நலவாழ்வு மையங்களும், முள்ளிமலை, மசக்கல், நெடிக்கோடு, சேலாஸ் ஆகிய நான்கு இடங்களில் புதிதாக ரூ.1.10 கோடி செலவில் துணை சுகாதார நிலையங்களும், ரூ.1.25 கோடி செலவில் தெப்பக்காடு மற்றும் இத்தலார் ஆகிய 2 இடங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டிடமும், ஆர்.கே.புரம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.31 கோடியில் கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக ரூ.146.23 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவத்துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலைப்பிரதேசம் என்றால் அதுஊட்டி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மருத்துவமனையை பொறுத்தவரை எம்ஆர்ஐ., சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கங்களுடனும் அமைக்கப்பட்டு, தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 6ம் தேதி நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில், ரூ.8.60 செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தினையும் திறந்து வைக்கவுள்ளார். பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

மலை மாவட்டமான நீலகிரியில் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கி பணியாற்றுவதில் சிரமம் இருந்து வந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுதிகள், குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 1071 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 70க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டனர்.

அதன் பின் 36 காலி பணியிடங்கள் இருந்தது. அதனை நிரப்பும் வகையில் கடந்த 4ம் தேதி நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 36 பேர் நீலகிரியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் காலியிடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ்பி நிஷா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கநாதன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் ரமேஷ் மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் உடனிருந்தனர்.

முதல் முறையாக பழங்குடியினருக்கு தனி வார்டு

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கப்பட்ட போது நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், மருத்துவமனையில் பழங்குடியினர்களுக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஆண்கள், பெண்களுக்கு தலா 20 படுக்கைகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறுக்கு என 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட பழங்குடியினருக்கான வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழங்குடியினருக்கு என 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது ஊட்டி அரசு மருத்துவமனையில்தான் என்பது சிறப்பு.

The post ஊட்டியில் ரூ.146.23 கோடியில் கட்டிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6-ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: