விழுப்புரம், மார்ச் 23: விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலிக்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவமனையின் முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் காக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (35). கடந்த 18ம் தேதி நெஞ்சுவலி காரணமாக சிக்னல் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து அவருக்கு இதயத்துடிப்பு சீராக இல்லை என்று கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென பாண்டியராஜன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் 5 நாட்களுக்கு முன்பே நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்தோம். நீங்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனை முன்புறம் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கிய அவர்கள் விழுப்புரம்- புதுவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் எஸ்.பி. சரவணன் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார் சிலரை பிடித்து போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே உயிரிழந்த வாலிபரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ெதாடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post விழுப்புரத்தில் சிகிச்சைக்கு சேர்த்த வாலிபர் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உறவினர்கள் சாலை மறியல்: எஸ்.பி. தலைமையில் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.