கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு நடமாட்டம் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

 

திருப்பூர், மார்ச் 25: திருப்பூர் பல்லடம் சாலையில் தரைத்தளம் உள்ளிட்ட 7 தளங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மட்டுமல்லாது பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் துறை, கனிமவளத்துறை, கருவூலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி கிளை மற்றும் இ-சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகங்களில் பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பின்புற பகுதிகளில் புதர் மண்டி கிடப்பதன் காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவு என்பதால் முன் பகுதியில் பாம்பு ஒன்று தவளையை கவ்விக் கொண்டு ஊர்ந்துள்ளது.

இதனை நடைப்பயிற்சி சென்ற நபர்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி விஷப்பூச்சிகள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்பகுதிகளில் முதல் மண்டி கிடந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு நடமாட்டம் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: