வேகமாக காரில் வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து எஸ்ஐ மீது சரமாரி தாக்குதல்: போதை ஆசாமிகள் 2 பேருக்கு வலை

 

புதுச்சேரி, மார்ச் 23: புதுச்சேரி போக்குவரத்து எஸ்ஐ மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பெரியகடை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாட்டினர் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

சுற்றுலாதலம் மட்டுமில்லாமல் மதுபான விற்பனையிலும் புதுச்சேரி மாநிலம் பெயர் போனது. அண்டை மாநிலங்களில் கிடைக்கும் மதுபானங்களை விட, வெளிநாட்டு மதுபானங்களும் இங்கு சுலபமாக கிடைக்கும். விலையும் குறைவு. இதனால் மதுவிற்காக ஒரு கூட்டம் புதுச்சேரிக்கு வருகின்றனர். அதற்கு ஏற்ப புதுச்சேரி அரசும் கடந்த சில ஆண்டுகளில் மாநிலம் முழுக்க புதிய மதுபான கடை மற்றும் ரெஸ்டோ பார்களை திறந்து இருப்பதால், சுற்றுலா பயணிகள் ரெஸ்டோ பார்களுக்கு படையடுத்து செல்கின்றனர். மேலும் கலால் துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி ரெஸ்டோ பார்கள் செயல்பட்டு வருவதாகவும் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரியில் கடந்த 5ம் தேதி முதல் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் இரவு வரை நடந்தது. அப்போது சட்டசபை அருகே போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், ஊர்க்காவல் படையினர் என பலர் பணியில் இருந்தனர். பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு கிழக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார், தனது நண்பருடன் சாப்பிட ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதிக வேகமாக, காவலரின் வாகனத்தை இடிப்பது போல் வந்து நின்றது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமார், காரை ஓட்டிவந்த ஓட்டுனரிடம் நகரப்பகுதியில் ஏன் வேகமாக வருகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது காரின் ஓட்டுனர் மதுபோதையில் இருந்ததால், உடனே குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் காரில் இருந்த மற்றொரு நபர் திடீரென எழுந்து வந்து, குமாரை சரமாரியாக தாக்கினாராம்.

அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், கூச்சலிட்டபோது போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். உடனே பொதுமக்கள் எஸ்ஐ குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு போக்குவரத்து எஸ்.பி. செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து எஸ்ஐ குமார், பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து பெரியகடை ேபாலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது தீபன் மற்றும் சமுத்திரம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வேகமாக காரில் வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து எஸ்ஐ மீது சரமாரி தாக்குதல்: போதை ஆசாமிகள் 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: