மதுரை, மார்ச் 23: மதுரையில் வாங்கிய பணத்தை தராத வாலிபரை, காருடன் கடத்திய வழக்கில் ஏற்கனவே மூவர் கைதாயினர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை காந்தி மியூசியம் அருகே நேற்று முன்தினம் காரில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த செந்தில்வேல்(32) என்பவரை 3 பேர் கடத்திச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லையில் இருந்தவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (31), மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து (23) மற்றும் ஸ்ரீகாந்த் (19) என்பது தெரியவந்தது.
மேலும், கடத்தப்பட்ட செந்தில்வேல், தனது உறவினரான ராஜ்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருப்பதும், அதை திரும்ப கொடுக்காததால், அவரை கடத்தி குடும்பத்தினரை மிரட்டி பணத்தை வசூலிக்க இந்த சம்பவம் நடந்துள்ளதும் உறுதியானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜ்குமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கடத்தல் வழக்கில் அவர்களுக்கு உதவியாக இருந்த ஆத்திகுளத்தை சேர்ந்த கௌதம் (24) நாகபாலகுமாரன்(23), தீபக் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
The post மதுரையில் நடந்த வாலிபர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.