வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி 7 பேரிடம் ரூ.6.49 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, மார்ச் 13: வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மர்ம கும்பல் 7 பேரிடம் ரூ.6.49 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்காலை சேர்ந்த திருகுமரன் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைநம்பி திருகுமரனும் மர்ம நபருக்கு ரூ.3.63 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து திருகுமரனுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதில் சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதேபோல் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த தென்னரசன் என்பவர் ரூ.63 ஆயிரம், மரப்பாலம் பகுதியை சேர்ந்த மேஷாக் ரூ.44 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேலும் லாஸ்பேட்டையை சேர்ந்த தினகரன் என்பவர் ஓ.எல்.எக்ஸ் மருத்துவ படுக்கை விற்பனைக்கு இருப்பதை பார்த்துள்ளார்.

இதையடுத்து தினகரன், அந்த விற்பனையாளரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர் தினகரன் ரூ.89 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். தொடர்ந்து குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் ரூ.46 ஆயிரம், காரைக்காலை சேர்ந்த நாகஅர்ஜூன் ரூ.23 ஆயிரம், கரையம்புத்தூரை சேர்ந்த சூர்யா ரூ.19 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய 7 பேரும் ரூ.6.49 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்ததுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி 7 பேரிடம் ரூ.6.49 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: