கடலூர், மார்ச் 8: கடலூர் அருகே கணவனை கொன்று செப்டிக் டேங்க்கில் வீசிய மனைவிக்கு ஆயுள் தண்டனையும், மாமியார், 2 கொத்தனாருக்கு 3 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து கடலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காலி முட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் அய்யாப்பிள்ளை (எ) பூராசாமி (50). இவர் கடலூர் மாவட்டம் வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது வடலூரில் வசித்து வந்த பரிமளா (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பரிமளாவுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் இருந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அய்யாப்பிள்ளையும், பரிமளாவும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரிமளா சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்தார். பின்னர் வடலூரில் சொந்த வீடு கட்டி பரிமளா குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அய்யாப்பிள்ளை அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து பரிமளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவரை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 22.3.2019 அன்று அய்யாப்பிள்ளையை காணவில்லை என்று அவரது சகோதரர் ராஜாராமன் வடலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யாப்பிள்ளையை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 28.3.209 அன்று கணவரை கொன்றுவிட்டதாக கூறி பரிமளா வானதிராயபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.
அப்போது கணவர் அய்யாப்பிள்ளை அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தியதால் கடந்த 13.3.2019 அன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவரை, தானும், தனது தாயார் சரஸ்வதியும் சேர்ந்து தடியால் தலையில் அடித்து கொலை செய்ததாகவும், கொலையை மறைக்க அவரது உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் போட்டுவிட்டதாகவும், இதற்கு வடலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார்கள் ராமலிங்கம் (72), தமிழரசன் (42) ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரிமளா, சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஷோபனா தேவி தீர்ப்பு கூறினார். அதில் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பரிமளாவுக்கு ஆயுள் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும், கொலை குற்றத்தை மறைத்ததற்காக சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.
The post வடலூர் அருகே போதையில் சித்ரவதை செய்த கணவனை கொன்று செப்டிக் டேங்க்கில் வீசிய மனைவிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.