உளுந்தூர்பேட்டையில் மழைக்காக மரத்தின் அடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி ஓய்வு பெற்ற தலைமை காவலர் உள்பட 2 பேர் பலி

 

உளுந்தூர்பேட்டை, மார்ச் 12: உளுந்தூர்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையின்போது சாலையோர புளியமரத்தின் கீழ் நின்றிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் (70) மற்றும் களமருதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் (65), இவரது பேரன் சூர்யா (25) ஆகிய 3 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் திருச்சி ரோட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழையின் காரணமாக இருசக்கர வாகனத்தை ரோட்டின் ஓரமாக சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்தபுளிய மரத்தின் கீழ் 3 பேரும் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் காசிலிங்கம் மற்றும் ராமர் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். சூர்யா படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த சூர்யாவை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கியதில் 2 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டையில் மழைக்காக மரத்தின் அடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி ஓய்வு பெற்ற தலைமை காவலர் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: