இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வழங்க 6 புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பதில்

 

புதுச்சேரி, மார்ச் 14: புதுச்சேரியில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் கூடுதலாக 2298 பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். ஆனால் அப்படி நிரப்பும்போது, வயதுவரம்பு தளர்வு, சிலர் நீதிமன்றத்துக்கு வழக்குக்கு செல்வது போன்ற காரணங்களால் தாமதமாக வருகிறது. அதை விரைவாக முடித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ஆசிரியர் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். பதவி உயர்வு கொடுக்கப்பட்டு அதன் பிறகு காலியாகும் இடங்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களை கொண்டு நிரப்பப்படும்.

கரசூர், சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இடம் தற்போது பிப்டிக் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐடி பூங்கா உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. வரும், ஜூன், மே மாதங்களில் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். காரைக்காலில் துறைமுகம் அமைத்ததன் மூலம் அப்பகுதி வளர்ச்சியடைந்தது. புதுச்சேரியில் துறைமுகம் கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.

புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாயை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.500 கோடியும், ஒரு தொழிற்சாலையில் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

தண்ணீரை அதிகம் உறிஞ்சாத, சுற்றுச்சூழல் பாதிக்காத நிலையில் தான் இந்த தடையில்லா சான்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளியில் சிலர் இதனை எதிர்த்து அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்படும் என்று கூறி சுவரொட்டி ஒட்டுகிறார்கள். அது எதற்காக அப்படி செய்கிறார்கள், யாருக்காக செய்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வழங்க 6 புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பதில் appeared first on Dinakaran.

Related Stories: